Saturday 23 April 2016

KALADI THAMARAI = காலடி தாமரை


                                                            காலடி தாமரை 





                                          கேட்டுகொள்வது காதலில் இனிமை 
                                          கேட்டால் தருவது காதலி கடமை
                                          இன்பம் என்பது இருவரின் உரிமை 
                                          யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை 

என காதலின் பெருமையை இந்த வரிகள் உணர்த்தும்


                                 வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை -அவள் 
                                 வந்ததுமே பறந்தோடும் காதல் தொல்லை |
                                 எண்ணம் போல வாய்த்துவிட்டால் ஈடு இல்லை -வாழ்வில் 
                                 என்றைக்குமே இன்பத்திற்கு ஏது எல்லை 
என்றெல்லாம் அந்த மெல்லியலாளை வர்ணிப்பான் |
அவள் தன்னைத்தானே


                                                 கன்னத்திலே பழத்தோட்டம் 
                                                 கண்களிலே சதிராட்டம் 
                                                 கட்டழகு பெண் சிரித்தால் 
                                                 காளையர்க்கு[ள்] போராட்டம்   

என  வர்ணித்துக் கொள்வாள்
இப்படியெல்லாம் வர்ணனைக்கு உரியவளை வள்ளுவர் தன கண்முன்னே நிறுத்திக் கொண்டாரோ என்னவோ !
                                       நன்னீரை வாழி அனிச்சமே  நின்னினும் 
                                       மென்னீரள் யாம் வீழ்வேன்                         [1111]
அனிச்சமலரே நீ வாழ்வாயாக ! நீ மிகவும் மென்மைத் தன்மை உடையதாய் இருக்கிறாய் |ஆனால் என் காதலியோ உன்னைக் காட்டிலும் மென்மையானவள்
பாடலின் வரிகளோ

                                                   தத்தை போல தாவும் பாவை
                                                                             பாதம் நோகும் என்று 
                                                   மெத்தை போல பூவைத்தூவும் 
                                                                             வாடைக் காற்றும் உண்டு 
என்ற பாடல் வரிகள் குறளை நினைவு படுத்தும்
பாடல்:பச்சைக்கிளி 
படம்  :உலகம் சுற்றும் வாலிபன் 
 இன்னொரு பாடலில்
                                           தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்
                                            நான் பாய் விரிப்பேன் என்னை
என அவளின் மென்மையான பாதத்தை அனிச்ச மலருக்கு ஒப்புவமையாய்
கூறிய குறளை நினைவு கூறும்
பாடல்:தொடுதொடு எனவே
படம்  :துள்ளாத மனமும் துள்ளும்

மேலும்

                                     பூமகள் மெல்ல வாய் மொழி சொல்ல 
                                     சொல்லிய வார்த்தை பண்ணாகும் |
                                     காலடி தாமரை நாலடி நடந்தால் 
                                     காதலன் உள்ளம் புண்ணாகும் 
 என்ற பாடலும்
பாடல்:பவழக் கொடியிலே 
படம்  :பணம் படைத்தவன் 
                                           பூவினும் மெல்லிய பூங்கொடி 
என்ற  பாடலும்

 அந்த அனிச்சப் பூக் குறளை நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும்
பாடல்:பூவினும் மெல்லிய பூங்கொடி 
படம்  :கன்னிப்பெண் 












Tuesday 15 March 2016

Kan imaiyatha pen = கண் இமையாத பெண்

                                                 கண் இமையாத பெண் 
                       ஒரு பனித்துளி  தந்தால் பாற்கடல் செய்திடும் காதல்
                       ஒரு பாற்கடல் தந்தால் பனித்துளி ஆக்கிடும் காதல்
இந்தக் காதலின்  உன்னதத்தினாலோ  என்னவோ அவனுக்கு அவள் இங்கே
குழந்தையாய்த் தெரிகிறாள் |
                      குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா -உன்னை
                      குழந்தையாக்கி மடியில் வைத்து பாட்டுப் பாடவா
என்ற அவனுக்கு

                    மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா -அந்த
                   மயக்கத்திலே  சிறிது நேரம் கண்ணை மூடவா
என்று சொக்கிப் போகிறாள்
                                சொர்க்கம் என்பதொரு ஆறு
                                காதல் என்பதொரு தோணி
இந்த தேனாற்றில்  நீந்தி மகிழ்கின்ற காதல் கிளிகளில் ,காதலனுக்கு அவள்
இந்திர லோகத்து தேவதையாய்த்  தெரிகிறாள் |அதனால்  தான் அவன் , அவளிடம்
               இந்திர லோகத்தில் நான் வந்து தருவேன்  நாளொரு பூவீதம்
என்று பிதற்றுகிறான் }அது மட்டுமா ?
            வானில் ஒரு புயல் மழை வந்தால் -அன்பே எனை எங்கனம் காப்பாய்
என்று அவள் கேள்வி எழுப்ப
                              கண்ணே உன்னை கண்களில் வைத்து
                             இமைகள் எனும் கதவினை அடைப்பேன் |
என்று இனிதாய்ப் பதிலுரைப்பான்
இந்தச்  சுவையான உரையாடலைத்தான் அன்றே வள்ளுவர் ,
                     இமைப்பின் கரப்பார்க்கு  அறிவல்  அனைத்திற்கே
                     எதிலர் என்னும் இவ்வூர்                           1129
அதாவது
                           கண்ணுக்குள் இருக்கும் காதலர் தான் கண் இமைத்தால் மறைந்து போவதாய் அறிகிறேன்
எனப் பொருள் கூறும்
               பிரிந்து சென்ற காதலனின் வருகைக்கு காத்திருந்த அவள் வந்து சேர்ந்த காதலனைத் தன்  விழிச்  சிறையில் அடைத்து விட்டாள் , கண் திறந்தால்  அவர் போய்  விடுவார் , அதனால் கண் மூடிக் காத்திருந்தாளாம் ;              இந்தச் சுவையான கற்பனை வளத்தை அப்படியே தருவார் பாடலாசிரியர் |
                                                கண்விழித்துக் காத்திருந்தேன்
                                                கட்டழகர் குடி புகுந்தார்
                                                கண் திறந்தால் போய்  விடுவார்
                                                கண்மூடிக் காத்திருந்தேன்
எனக் குரலையும் உணர்த்தும் இந்த உன்னத வரிகள்
பாடல்: காத்திருந்தேன்  காத்திருந்தேன்
படம் :கைராசி
                          கண் இமையாத பெண் இவள் என்றால் 
                          காரணம் கூறுவதோ......
என ஒற்றை வரியிலும் இதே கருத்தினை வலியுறுத்தும் |
பாடல்: உனது விழியில் எனது பார்வை 
படம் :நான் ஏன்  பிறந்தேன் 

மேலும்
                                   மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு 
                                   மன்னவன்  நுழைந்ததென்ன  
என்று சுவை படச் சொல்லும் |
பாடல்: காத்திருந்த கண்களே 
படம் :மோட்டார் சுந்தரம் பிள்ளை 






































Monday 14 March 2016

Poovinum melliya poonkodi = பூவினும் மெல்லிய பூங்கொடி

                                           பூவினும் மெல்லிய பூங்கொடி 
ஆடச் சொன்னது  தேன் மலர் நூறு
அருந்தத் தருவது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பது யாரு
என்று பாடிய காதலன்  காதலியின் மென்மையைச்  சொல்ல வரும் போது
                                           பூவினும் மெல்லிய பூங்கொடி
                                            பொன்னிறம் காட்டும் பைங்கிளி
என்று வர்ணிக்கிறான் |அவளோ தன மென்மையை தானே சொல்ல வரும் போது
ராஜா ராணி ரகசியம்  எல்லாம் சொல்லுகின்றாள் -என்
ரோஜா இதழை லேசாத் தடவிக் கொல்லுகின்றாள்
தெற்குத் தென்றல் உன்னிடம் சொன்ன சங்கதி என்னம்மா ?-என்
சின்ன உடம்பை இருவரும் தொட்டால் என்கதி என்னம்மா ?
 என்று அங்கலாய்க்கிறாள் |
அவள் இடையின் மென்மையை  வள்ளுவர்
அனிச்சப்பூ கால்களையாள்  பெய்தால் நுசுப்பிற்கு
நல்ல படா அ  பறை                                        [1115]
இவள்  தன்  இடையின் மென்மையை உணராமல்  காம்பு களையாத அனிச்ச
மலரைத் தன் தலையில் சூடினாள்  |அதன் பாரம் தாங்காமல் இடை முறிந்தது
என்ற சொல்லே ஒலிக்கும் |
இதே கருத்தினை திரைப்பாடல் ஒன்று
பின்னிவைத்த கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால்
கன்னி இடை பின்னத் தோன்றுமோ ?-சிறு
பின்னளிடை பூவைத் தாங்குமோ ?
என அப்படியே தருகிறது
பாடல்: சின்னச் சின்ன கண்ணிலே
படம்  :தேன் நிலவு
கன்பட்டதும் கை தொட்டதும் புண் பட்டதா இல்லையா ?
புன்பட்டதும் பெண்மை கொஞ்சம் பண்பட்டதா  இல்லையா ?
என வினவும் இவளின்  மென்மையைச் சொல்லவரும் காதலன்
முல்லை-மலர்ச் செண்டுகள் கொண்டு சதிராடுது
செண்டு சதிராடினால்  இந்த இடை தாங்குமா ?
என விளக்குகிறான் |
பாடல்: தங்கத்தில் முகமெடுத்து
படம்  :மீனவ நண்பன்
மேலும் மற்றொரு பாடலில்
தங்க ரதம் போல் வருகிறாள் -அல்லித்
தண்டுகள்  போலே வளைகிறாள்
என்பது பெண்மைக்கு முத்தாய்ப்பாய் அமையும் |
இடையின் பேரழகை  அவன் நாடும் சீர்வரிசைக்கு நிகராகச் சொல்வது இன்னும் சிறப்பு |
ஊரறிய மாலையிடுவாரோ -இல்லை
ஓடிவிட  என்னமிடுவாரோ
சீர்வரிசை தேடி வருவாரோ -இல்லை
சின்ன இடை எண்ணி வருவாரோ
என்ற பாடலில்
பாடல்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ
படம்  : பார்த்தால் பசி தீரும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
என்று இடையின் மென்மையை மென்மேலும் இந்தப் பாடல் உணர்த்தும் :குறளையும் நினைவு கூறும்|
பாடல்: ஆயிரம் நிலவே வா
படம்  :அடிமைப் பெண் 


















Thursday 10 March 2016

Ithuthaan nilavo =இதுதான் நிலவோ

                                                      இதுதான் நிலவோ
                        நிலவை அழகிய முகத்தின் பிம்பமாய் பல்வேறு காவியங்களிலும் திரைப்பட பாடல்களிலும் அருமையாய்ச் சித்தரிப்பார்கள்  |நிலவைக் கண்டு
மலர்வதாகவும் சூரியனைக் கண்டு தாமரை மலர்வதாகவும் எண்ணற்ற காவியங்களில் பார்க்கலாம் |
                       நிலவிற்கும் அவள் வதனத்திற்கும்  வேறுபாடு காண முடியாமல்
குழம்பித்திரிவதை  அழகாய் பல காவியங்கள் சொல்லும் |
இங்கே திருக்குறளில்
                                     மதியும் மடந்தை முகனுமறியாப்
                                     பதியிற் கலங்கிய மீன்     [1116]
வானத்து நிலவிற்கும் இவளது முகத்திற்கும் வேறுபாடு காண முடியா நிலையில் விண்மீன்கள் கலங்கித் திரிகின்றன | நிலவைச் சுற்றி வட்டமிடும்
நட்சத்திரங்களானது நிலவையும் அவள் முகத்தையும் ஒப்பிடுவதே அமைந்துள்ளது |
                           கண்சிமிட்டும் தாரகைகள் வெண்ணிலாவே
                           உனைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே
என  நட்சத்திரங்களை நிலவின் தோழியராய் வர்ணித்துக் காட்டுவது ஒரு சிறப்பு |
மேற்படி குறளை  திரைப்பட  பாடல் நினைவு கூறும்
அது
                            இதுதான் அந்த நிலவா -என்று
                            முகம் பார்க்கும் வண்ணப் பந்து
                            இல்லை; இது முல்லை என்று
                            போராடும் கண்ணின் வண்டு
விளையாடி வரும் பந்துக்கும்  கண்ணின் [கரு]வண்டிற்கும்  அவள் முகம் நிலவாகவும் ,முல்லை மலராகவும் ,கண்டு வியக்கும் கற்பனைக் காட்சியாய்
பாடல் வரிகள் விளக்கும் |
பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
படம்  :பணக்காரக் குடும்பம்

மேற்படி திருக்குறளின்  கருத்தினை  ஒரு சோலையில் மலருக்கும் வண்டிற்கும்  உடன்பட்ட காட்சியாய் இங்கே விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று விளக்கும் | அங்கும்  நிலவு மலரை மறக்க வில்லை |துணைக்கு அழைக்கிறது |
தேனுண்ணும் வண்டு மதுதனை உண்டு
                                    தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
                                    தடங்கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி                        [19]
                                    மலர்க்கரம் குவியும் என்ரஞ்சிப்
போனது வண்டோ பறந்தது பழம்தான்
                                    புதுமையோ எனப் புகன்றாள்
தாமரை மலரில் தேன் உண்ண வந்த வண்டு தேனை உண்டு அம்மலரின் மேலேயே மயங்கிக் கிடந்தது  |இதைக் கண்டவள் ஒருத்தி மலர்மேல் கிடப்பது வண்டு என்று எண்ணாமல் ,அது நாவல் பழம் என நினைத்து த்  தனது கையால் எடுத்தாள் | இவள் கையிலே எடுத்ததை கண்ட வண்டு ,வானத்து முழு நிலவு வந்துவிட்டது போல என்றெண்ணி தான் இருந்த தாமரை மலர்கள் மூடிக்கொள்ளுமுன்பு  வெளியே போய்விடவேண்டுமென்று பறக்க ,அப்படி அந்த வண்டு பறப்பதைப் பார்த்து ,பறப்பது வண்டோ பழமோ தெரியவில்லையே, இது என்ன புதுமை என்று வியந்தாளாம் அந்தப் பெண் |
             இப்படிக் குழப்பமான ஒரு காட்சியை  திரைப்பட பாடலொன்று
தாமரைப் பூவினுள் வண்டு வந்து
தேனருந்த  இதழ்  மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதற்போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய் !
பாடல்:மெல்ல மெல்ல  மேனி
படம் :பணமா பாசமா
இன்னொரு பாடலில்
மது உண்ண மலர் தேடி வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா ?
பாடல்: நிலவோடு வான் முகில்
படம் :ராஜ ராஜன்
என்று சுவை படச் சொல்லும் |
























Tuesday 1 March 2016

Netru varai nee yaaro =நேற்று வரை நீ யாரோ

                                            நேற்று வரை நீ யாரோ
                             இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
                             நம் ராஜாங்கம் நாள் தோறும் ரதி தேவன் ஆட்சி
                             இதழ் வாய் திறந்து கொடுத்தேன் விருந்து
                             என் மலர் மேனி நோகாமல் மெதுவாக அருந்து
                             பனிப்புல் மீது படுக்கை போட்டு
                             மணிப்பூங்கவிதை மனம் போல் தீட்டு
                             என அவனை மஞ்சத்திற்கு அழைக்கிறாள் காதலி
 அது சமயம் ,முன்னர் அவர்களுக்குள் பூத்திருந்த காதலை  அவர்கள் உள்ளங்கள் அசை போடுகிறது ; எங்கோ  பிறந்து எங்கோ வளர்ந்த அவர்கள்  இணைந்ததை நினைவூட்டுகிறது  இந்த காவியம்|
                                  யாயும் யாயும் யாராகியரோ
                                 எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
                                 யானும் நீயும் எவ்வழி அறிதும்
                                செம்புலப்  பெயல் நீர் போல
                                அன்புடை நெஞ்சம் தான்  கலந்தனவே
                   என செம்புலப் பெயல் நீராரின் காவிய வரிகள் அவர்கள் ஒன்று பட்டதை   உணர்த்துகிறது
இதையே
                                      நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
                                     இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
 என்ற திரைப்பட பாடல் வரிகள் சொல்கிறது
பாடல்; நேற்று வரை
படம் ;வாழ்க்கைப் படகு
செம்புலப்பெயல் நீர் போல  என்னும் வரிகளை
                                  வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
                                   நானொரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
       என்ற பாடல் வரிகள் உணர்த்தும்
பாடல்:கொஞ்ச நேரம்  என்னை மறந்தேன்
படம் :சிரித்து வாழ வேண்டும்

                          செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
                          ஆனது நெஞ்சம் நீ என் வாழ்க்கையில் சொந்தம்
பாடல்:சோலைத்தீவில் மாலைத் தென்றல்
படம் :வெள்ளை ரோஜா
இதனையே விவேக சிந்தாமணிப் பாடலும்  அன்புக்கு இல்லை தூரமும் தொலைவும்  என்ற தலைப்பில்
மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும்       [56]
தாங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆமதற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்  இதயம் விட்டு அகலாரே

50000 யோசனை தூரத்தில் உள்ள மழை முகில் கண்டு மயில் நடனமாடும் |
1லட்சம் யோசனை தூரத்தில் உள்ள சூரியன் முகம் பார்த்து தாமரை இதழ் மலரும் | அதற்கு இரண்டு மடங்கு தூரத்தில் உள்ள சந்திரனைக் கண்டு
சிவப்பு ஆம்பல் மலர்கள் பூத்திடும் |அன்பு  உள்ளங்களைத்  தூரம் பிரிப்பதில்லை |
என விளக்கம் தரும்
எங்கிருந்தோ  எத்தனையோ தூரத்திலிருந்து  பெய்யும் மழையானது
நிலத்தோடு சேர்வதையும் இந்தப் பாடல் வரிகள் உணர்த்துகிறது |
இதைப் பாடல் வரிகளோ
                            நம்பிய பெண் ஒரு தாரகை -அவள்
                            நாடிய நீ ஒரு வானகம்
என்றும்
பாடல்: காதல் சரித்திரத்தை
படம் :அவன் ஒரு சரித்திரம்

                                       நீ மேகம் ஆனாலென்ன
                                       நான் தோகை ஆன பின்னே
பாடல்: நீ மேகம் ஆனாலென்ன
படம் :தாயில்லாக் குழந்தை
என்றும்
                                         மழை நீ ............நிலம் நான்
                                         மயக்கமென்ன ....................
பாடல்:ஒரே நாள்
படம் :இளமை ஊஞ்சலாடுகிறது
போன்ற பாடல்கள் இரு காவியங்களையும் அப்படியே பிரதிபலிப்பதாய்
இருக்கும் |




























Saturday 20 February 2016

imbula inbangal =ஐம்புல இன்பங்கள்

                   ஐம்புல இன்பங்கள் 
                        மூன்று தமிழுமாய் முத்தமிழும்
                         நான்கு குணமுமாய் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பும்
                        ஐந்து புலன்களும் ஒருசேர உள்ளவளுமாய்
அமைந்து விட்டவள்தான் இந்த சித்திரப் பாவை
                            வான வில்லின் நிறம் எடுத்து
                            மேகம் எனும் வெண் திரையில்
                            மின்னல் எனும் தூரிகையால்
பிரம்மனால் எழுதப்பட்ட உயிரோவியம்தான்  இந்தச் சித்திரப் பாவையின் உருவம் |


                            அச்சம் நாணம் என்ற நாலும்
                            அருகில் வந்தவுடன் அஞ்சும் -இதழ்                [23]
                            பருகும் போது நெஞ்சம் ஆறும் -அது
                            பாடும் இன்பஸ்வரம்  ஏழும்



என்று எண் வரிசையில் அவள் குணநலன்களையும் ,அவள் நெருக்கம் தந்த சுகத்தையும் அழகாய் வர்ணிக்கின்றான் கவிஞன் |
திருக்குறளிலோ ............. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில்
                        கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
                        ஒண்டொடி கண்ணே உள               [1101]
என்பான் வள்ளுவன்
கண்ணால் கண்டும் ,காதால் கேட்டும் ,வாயால் உண்டும் ,நாசியால் நுகர்ந்தும் ,
மெய்யால் தீண்டியும் மகிழும் ஐம்புல இன்பங்களும் அழகிய வளையலணிந்த
இவளிடத்தில் உள்ளன
என பொருளுரைக்கும் |
            மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ 
                                                                            என அவள் வினவ
              நான்கு குணமும் சேர்ந்தது ஒரு பெண்ணிடமோ  
                                                                            என எதிர்க் கேள்வி கேட்கிறான் |
பாடல்:மூன்று தமிழ்
படம் : பிள்ளையோ பிள்ளை
இங்கே ஆணை முத்தமிழுக்கு ஒப்புவிப்பது ஓர் தனிச் சிறப்பு |
மேற்படி குரளின் வரிகளை ............

                             கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்
                              ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
                              என்று அப்படியே தருகிறது
பாடல்:அவள்  வருவாளா
படம் :நேருக்கு நேர்

மேலும் ஒரு பாடலில்
                           என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
என ஆச்சரியமாக அவள் கேட்க
                           இங்குதான் தோன்றியது முத்தமிழ்ச்  சங்கம்
என்று அவளைக் குறிப்பிட்டு அவன் சொல்கிறான்
பாடல்:புலவர் சொன்னதும்
படம் :ஆயிரம் பொய்
இன்னும்
                            அஞ்சனம் தந்தாள் நகை தந்தாள்
                            அச்சம் நாணம் மடம் தந்தாள்
எனப் புகழ்கிறான்
பாடல்:யார் யார் யாரவள்
படம் : பாச மலர்

இன்னொரு பாடலில்
                                     நாலு வகை குணமிருக்கும்
                                    அஞ்சுகின்ற மனமிருக்கும்
                                    ஆறுகின்ற பொழுது வரை
                                     அனல் போல் கொதிப்பதெது
பாடல்: வெண்ணிலா வானில்
படம் :மன்னிப்பு
என அவளின் நாலு வித குணத்தை  அவளே பாடுவதாய் வருகிறது

மேலும் ஒரு பாடலில்
                     தத்தி வரும் தளிர் நடையில்  பிறந்ததுதான் தாளமோ
                     தாவி வரும் கையசைவில் விழைந்ததுதான் பாவமோ
                     தெய்வ  மகள் வாய் திறந்து  இசைப்பதுதான் ராகமோ
                    இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ ..........

என முத்தமிழுக்கு உரியவளாய் நினைத்துப் பாடுவது இன்னும் சிறப்பு |

பாடல் அழகு தெய்வம்  மெல்ல மெல்ல
படம் :பேசும் தெய்வம்


















Sunday 7 February 2016

Anna nadai - அன்ன நடை

                                   அன்ன நடை 

                             குதித்தாடி மருண்டோடும் கலைமானோ -இளங்
                             குமரிகளும் மயங்கும் சிலை தானோ
                                                                                                                  என்றும்
                              வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை -அவள்
                              வந்ததுமே பறந்தோடும் காதல் தொல்லை
                              எண்ணம் போல வாய்த்துவிட்டால் ஈடு இல்லை -வாழ்வில்
                              என்றைக்குமே இன்பத்திற்கு எது எல்லை
         என்பதாகவெல்லாம் அந்த அழகுப் பெட்டகத்தின் எழிலை வர்ணிக்கிறான் காதலன் |
இங்கோ விவேக சிந்தாமணிப் பாடலொன்று
                          அன்னம் பழித்த  நடை ஆலம் பழித்த விழி
                                                                      அமுதம் பழித்த மொழிகள்
                          பொன்னம் பெருத்த முலை கன்னங் கருத்த குழல்
                                                சின்னஞ் சிறுத்த இடை  பெண்                                    [26]
                           என் நெஞ்சு உருக்க அவள் தன்  நெஞ்சு கற்ற கலை
                                                  என் என்று உரைப்பதினி நான்
                           சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி
                                               தெய்வங்களுக்கு அபயமே                                            [76]

என்று இனிதே சொல்கிறது
                 


              அன்னப் பறவையின் நடையைப் பழிக்கின்ற நடை அழகும் ,கொல்லு ம் விஷத்தை வெல்லுகின்ற கூறிய கண்களும் ,அமுதம் வெட்கும்படியான  இனிய வாய்ச்சொல்லும் ,பொன் போல நிறமுடைய பெரிய மார்பும்
கன்னங் கரேல் என்றிருக்கும் கருத்த கூந்தலும் ,சின்னஞ் சிறிய சிற்றிடையும் உடைய பெண் இவள் | என் நெஞ்சம் உருக வைக்கும் வித்தையை இவள் நெஞ்சு எங்குதான் கற்றதோ? இவளால் நான் படும் பாட்டை என்னென்று சொல்வேன் ! இந்தப்  பொல்லாத நான் படும் துயரத்தில் இருந்து  கடவுள் தான்
என்னைக் காப்பாற்ற வேண்டும்  என விளக்கம்  கொடுக்கிறது|
திரைப் பாடல்களோ
                                                  மின்னல் உருமாறி மண்மேலே
                                                                     கன்னியைப் போலே
                                                  அன்ன நடை பயிலக் கண்டேன்
                                                                       ஆசையினாலே
பாடல்:முல்லை மலர் மேலே 
படம்: உத்தம புத்திரன் 
ன்றும்
                                          அன்னம் போல நடை நடந்து வந்து -என்
                                          அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
என்றும்
பாடல்; என்னை விட்டு
படம் ; குமுதம்

                            அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
                            ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
                            இன்னிசையைப்  பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
                            இயற்கை எல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
என்று  அன்னம் பழித்த  நடைக்குப்  பதில் சொல்லும் |
பாடல்: வண்ணத் தமிழ்
படம்  : பாவை விளக்கு
மேலும்
                                                   அமுதும் தேனும் எதற்கு ?   நீ
                                                    அருகினில் இருக்கையிலே எனக்கு
என்று அமுதம் பழித்த  மொழிக்கும்
பாடல்:அமுதும் தேனும் எதற்கு
படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்
           கொல்லுகின்ற விஷத்தை வெல்லுகின்ற கூரிய கண்கள்
                                           எத்தனை பெண் படைத்தான்
                                           எல்லோர்க்கும் கண் படைத்தான்
                                           அத்தனை கண்களிலும்
                                            ஆசை எனும் விஷம் கொடுத்தான்
என்று பாடுவது விவேக சிந்தாமணியின்  மேற்படி பாடலுக்கு உயிரூட்டும்
பாடல்: கடவுள் மனிதனாக
படம் : வானம்பாடி